அமைச்சர் மனோகணேசனின் அதிரடி உத்தரவு! செம்மலை பிள்ளையாரில் காணொளிப்பதிவு!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்றையதினம் விஜயம் செய்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் சர்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார் .

இதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய குறித்த காணியில் எந்தவொரு தரப்பும் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி எந்தவித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது என்றும், பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியுடன் எந்தவொரு தரப்பும் கட்டுமான பணிகள் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தீர்ப்பில் திருப்தில்லாத விகாரையின் பெளத்த தேரர் அவசியமானால் மேன்முறையீடு செய்யலாம் என்றும், ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி இனி கட்டுமான பணிகள் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களை முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, பொலிஸ் அத்தியட்சகர் சேனாநாயக்க மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி கங்கநாத் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மாவட்ட செயலக அதிகாரிகள் சகல தரப்பினருடனும் சர்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு நேரடி விஜயம் செய்து தற்போதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகள் தொடர்பாக காணொளி பதிவுகளை எடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சரின் இந்த உத்தரவுக்கு அமைவாக இன்றையதினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உமாமகள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கனகதவராசா மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இணைந்து பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்று காணொளி பதிவுகளை மேற்கொண்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை அமைச்சரின் உத்தரவின் பேரில் இவ்வாறு கண்காணிப்பு பணிக்கு சென்ற அரச அதிகாரிகளை பொலிஸார் பெயர்களை கேட்டு பதிவுகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *